Tuesday, August 2, 2011

அரசியலாகும் சமச்சீர் கல்வி ..? ஒரு விரிவான பார்வை - பகுதி 1


அரசியலாகும் சமச்சீர் கல்வி ..? ஒரு விரிவான பார்வை - பகுதி 1


'கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றி மூத்தது தமிழ்குடி'. இப்படிச் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழ்ச்சமூகம் இன்றைக்கு
ஆங்கிலத்தில் கற்றுக் கொடுத்து தமிழ்க்குழந்தைகளை அறிவுஜீவிகளாக மாற்றும் மெட்ரிக்குலேசன் கல்வியை தேடிப்படிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. உலக மாந்தர்கள் எப்படி வாழவேண்டும், ஒரு அரசன், அமைச்சர்கள் எப்படி செங்கோல் நடத்த வேண்டும் என்று சொன்ன உலகப்பொதுமறை திருக்குறள், மொழியில் ஆராய்ச்சிகள் செய்து முச்சங்கம் கண்டது மதுரை.
ஒன்றுக்கு வைத்தியம் செய்ய மற்றொரு நோய் கிளம்பாமல் வந்த நோயை மற்றும் நோவு தெரியாமல் அழித்த சித்த மருத்துவம், பட்டிலும், பருத்தியிலும் நூல் எடுத்து நெசவு செய்து ரோமானியர்களை மயக்கியதும் தமிழ்ச்சமூகம் தான். மேற்கத்தியர்களை வியக்க வைத்த கணிதமேதை ராமானுஜம் தொடங்கி இன்றைய தமிழ் விண்வெளி விஞ்ஞானி அப்துல்கலாம் வரை கணக்கில் கொண்டால் நீண்டு கொண்டே போகும் பல மேதைகளை கண்டது தமிழ்ச்சமூகம்.
ஜோதிடம் என்ற பெயரில் பிரபஞ்சத்தின் கோள்களின் இயக்கங்களை எல்லாம் துல்லியமாக கணக்கிட்டு இந்த நாளில் மழை சுபிட்சுக்கும், இந்த நாளில் வறட்சி வரும், இந்த நாளில் கடல் கொந்தளிப்பு இருக்கும் என்று முன்னமே எழுதிவிடுகிறானே ஒரு ஜோதிடன்! அவனுக்கு எந்த கணித பல்கலைக்கழகம் கணக்கை கற்றுத்தந்தது? தமிழின் தொன்மையை அறிந்து அந்த இனிய மொழியின் இலக்கணத்தை கற்றுக் கொள்ள ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடல் கடந்து வந்தவர்களை கண்டது தமிழகம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இதே சமூகம் தான் இன்றைக்கு அடிமைகளை உருவாக்க உருப்போட்ட ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தொடங்கி வைத்த ஆங்கில வழி மெட்ரிக் கல்வியில் கற்றுக் கொள்ள அடித்து பிடித்து நிற்கிறது.
பாகுபாடு இல்லாத கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஒருபுறமும், எங்கள் குழந்தைக்கு எதை கற்றுத்தர வேண்டும் என்பதை அரசு தடுக்க கூடாது என்று வேறொரு புறமும் கூக்குரல்கள் எழுகின்றன. கல்வி விவாதப் பொருளாக மாறிவிட்டிருக்கிறது. தமிழகம் முழுவதற்கு ஒரே பாடத்திட்டம். இது தான் சமச்சீர் கல்வி. இது சமூகத்தில் கல்வியில் இருக்கும் ஏற்றத்தாழ்வை போக்கும் ஒரு முன்னேற்ற நடவடிக்கை என்பதால் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று அதிக எண்ணிக்கையில் ஆதரவான குரல்கள் எழுந்துள்ளன.
தி.மு.க ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளின் சுயபுராணங்கள் இருப்பதால் அவர்கள் தயாரித்த புத்தகங்கள் மாணவர்களின் மனதில் தவறான விதைகளை ஊன்றிவிடும் என்று தற்போதைய அ.தி.மு.க ஆட்சி சொல்கிறது. ஒரு வகையில் பார்க்க போனால், தங்களது சுயநலனை முன்னிறுத்தி சில பக்கங்களை தி.மு.க தலைமை அதில் பதித்து விட்டிருக்கிறது. சூரியனை பற்றி படிக்க போகும் மாணவனுக்கான பாடத்தில் தி.மு.க என்ற கட்சியின் அடையாள சின்னமான உதயசூரியன் இடம் பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது தான். அது போல் கனிமொழியை விட பல கவிதாயினிகள் திறமை இருந்தும் புகழ் பெறாமல் எங்கோ ஒரு மூலையில் இருப்பதை தி.மு.க தலைமை அறிந்திருந்தும், கனிமொழியை ஒரு கவிஞராக பாடபுத்தகங்களில் முன்னிறுத்துவதை ஏற்றுக்கொள்ள நிச்சயமாக முடியாது தான். ஆக, திட்டமிட்டோ, திட்டமிடாமலோ தி.மு.க தனது ஆட்சிக்காலத்தில் தொடங்கி வைத்த ஒரே நல்ல விடயம் என்ற சமச்சீர் கல்வி இதுவரை தமிழக மாணவர்களின் கைக்கு எட்டாக்கனியாக மாறிவிட்டிருக்கிறது. இது பற்றிய ஒரு விரவான  பார்வைத் தொடராக இக்கட்டுரை அமைகிறது.
அறிவும், திறனும் நிறைந்த தமிழர்கள் ஆங்கிலத்தை ஒரு தொடர்பு மொழியாக மட்டும் கருதாமல் தங்கள் குழந்தைகள் அதிலேயே ஊறித்திளைத்து படிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டதால், மெட்ரிக் பள்ளிகளுக்கு கிராக்கி ஏற்பட்டிருந்தது. ஆனால் இந்த மெட்ரிக் பள்ளிகள் இந்த சராசரி தமிழன் கனவு காணுவதை போல் அவ்வளவு உசத்தியா என்றால் இல்லை என்பது தான் பதில். இந்த மெட்ரிக் ஆங்கில கல்வியின் ரிஷிமூலம் முதல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் சமச்சீர் கல்வி குழப்பம் வரை இங்கு காண்போம்.
எங்களுக்கு தேவை படித்த அடிமைகள்
இந்தியாவிற்கு சுரண்ட வந்த ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கருவில் உதித்தது தான் இந்த மெட்ரிக்குலேசன் பள்ளி கல்வி முறை. திறனுள்ள எழுத்தர்களை (கிளார்க்குகள்) உருவாக்க ஒரு கல்வி முறை ஆங்கிலேயர்களுக்கு தேவைப்பட்டது. இந்த கல்வியால் இந்தியர்கள் பெரிய அளவுக்கு நுட்பத்தையோ, சிந்திக்கும் திறமையையோ பெறக்கூடாது. ஆனால், தாங்கள் சொல்வதை புரிந்து கொண்டு அதற்கேற்ப காலால் இட்ட வேலையை தலையால் முடிக்க வேண்டும் என்பது தான். அதற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்கினார்கள். அதற்கு உயர்கல்வி என்று பெயரிட்டார்கள்.
இதற்கு முன்பு வரை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வீட்டிலேயே இருந்து கற்றுக் கொள்ளும் திண்ணைக்கல்வி, குருகுலத்திற்கு சென்று குருவின் பணிகளை எல்லாம் செய்து கொடுத்து கற்றுக் கொள்ளும் குருகுலக்கல்வி, இதையும் விட்டால் சான்றிதழ் கல்வி என்பது தான் கல்வி என்ற பெயரில் இருந்தன. கிழக்கிந்தியக் கம்பெனி நுழைந்தவுடன் தங்களுக்கான வேலையாட்களை தயார் செய்ய பல வரையறைகளை கொண்ட உயர்கல்வி(!) முறையை அறிமுகம் செய்தார்கள்.
இந்த கல்விக்கான பாடத்திட்டங்களை மெக்காலே என்பவர் தயாரித்தார். இவர் அளித்த குறிப்புகளின் அடிப்படையில் தான் கிழக்கிந்தியக் கம்பெனி பள்ளிகளில் பாடங்கள் நடத்த உத்தரவிட்டது. அதன்படி ஐரோப்பிய இலக்கியம், அடிப்படை அறிவியல் என்று பாடங்களை நடத்தும் பள்ளிகளை தொடங்கியதாக விவரணங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்த பள்ளிகளில் ஆங்கிலத்தை கற்றுக் கொண்டதன் மூலம் அன்றைக்கு ஆங்கில அரசாங்க தொடர்பான விடயங்களை வாதிட வழி கிடைத்தது. நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் தான் வாதாட வேண்டும் என்று அந்த காலகட்டத்தில் தான்(1837 ம் ஆண்டு) சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த ஆங்கில வழி கல்வி கூடங்கள் தொடங்கப்பட்ட நிலையில் இதில் படித்த இந்தியர்களின் எண்ணிக்கை உயர தொடங்கியது. குறிப்பாக ஆங்கிலேயர்களை விட இந்தியர்கள் ஆங்கிலத்தை சிரத்தையாக படித்து தெளிவானதால் வியந்து போன ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியர்களுக்கு உயர்பதவிகளை வழங்க முன்வந்தது. இதற்கான ஆணையை 1849 ஆம் ஆண்டில் ஹார்டிங் பிரபு பிறப்பித்தார். இந்தியர்கள் இப்படி ஆங்கிலேயர்களிடம் பதவி பெற்று வளமாக கண்டதை கண்ட மற்றவர்களுக்கும் தாங்களும் அப்படியே படித்து அதிகாரிகளாக மாற ஆசையை தூண்டியது. ஆங்கில கல்வி உயர்ந்தது என்ற ஒரு நிலை இப்படி உருவாக்கப்பட்டது. இது இப்போதும் தொடர்கிறது என்பது தான் வேதனை.
இப்படி உருவாக்கப்பட்ட கல்விமுறை 1854 வாக்கில் சிறிய மாற்றங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டது. 1854 ம் ஆண்டு ஜுலை 19 ம் திகதி அப்போது இந்திய கல்வி கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த சார்லஸ் உட் என்பவர் புதிய கல்வி கட்டமைப்பை கொண்டு வந்தார். அதன்படி, உயர்நிலைக்கல்வி, கல்லூரிக்கல்வி என்று ஒருங்கிணைந்த கல்வி முறையை அறிமுகம் செய்தார். அதுவரை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கல்வி தனியார் கைகளுக்கு போக இந்த அறிமுகம் வழிவகுத்தது. தனியாரால் தொடங்கப்படும் பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்க இவரது முறை உதவியது. 1857 ஆம் ஆண்டில் மெட்ராஸ், கல்கத்தா, பாம்பே ஆகிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவை உயர்கல்விக்கானவை என்று கூறப்பட்டாலும் பல ஆண்டுகளாக மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் கட்டுப்பாடு இந்த பல்கலைக்கழகங்கள் வசம் தான் இருந்தன.
மெட்ரிக்குலேசன் கல்வியில் பல்கலைக்கழகங்களுக்கு என்ன வேலை என்ற கேள்வி எழுந்த போதிலும், அதை சட்டை செய்ய அப்போது யாரும் தயாராக இல்லை. இத்துடன், 1902 ஆம் ஆண்டில் உயர்நிலைக்கல்வியும் பல்கலைக்கழகங்களில் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. இந்த முடிவு அப்போதை கடும் சர்ச்சைகளை கிளப்பியது. பின்பு வழக்கம் போல் அடங்கிப் போனது. இருந்தாலும் இந்த முடிவு எடுக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து தான் அந்த ஒப்படைப்பு திரும்ப பெறப்பட்டது. ஆனால் மெட்ரிக்குலேசன் கல்வி மட்டும் தொடர்ந்து பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தன. 1944 ஆம் ஆண்டு சார்ஜண்ட் என்பவரின் அறிக்கையை தொடர்ந்து மண்டல மொழிக்கல்விக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதனால் தான் ஆங்கில வழியாக மட்டுமின்றி அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்க முடியும் என்ற நிலை உருவானது.
இந்திய விடுதலையை தொடர்ந்து, கல்வித்துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. கல்வியை மேம்படுத்துவது குறித்து ஆராய 1952/53 ஆம் ஆண்டில் இலட்சுமணசாமி முதலியார் குழுவும், 1964/ 66 ல் கோத்தாரி குழுவும் அமைக்கப்பட்டன. பிறகு 1986 ஆம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த கல்விக் கொள்கையானது, வாழ்க்கையுடன் தொடர்புடையதாக மாற்றியமைக்கப்பட்டவை என்று சொல்லப்பட்டன. புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் அறிமுகமாயின. தாய்மொழி, மண்டல மொழிகள் வாயிலாக கற்பிப்பது பெருமளவில் (!) ஊக்குவிக்கப்பட்டது. இதனால் பாமர மக்களும் கல்வியை எளிதில் கற்றுக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள்.
இதற்கு முன்னதாக 1976 ல் சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு அளித்த பரிந்துரையின் படி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் உயர்நிலைக்கல்வி கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. அப்போது தமிழத்தில் மொத்தம் இருந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் 20 தான். 1997 ல் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரகம் உருவாக்கப்பட்ட பிறகு ஏராளமான புதிய மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவை எப்படி வேண்டுமானாலும் பாடப்புத்தகங்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால் பள்ளியின் இறுதி ஆண்டில் அரசு நிர்ணயித்துள்ள பாடத்திட்டத்தை மட்டும் பின்பற்றி தேர்வுகளை எழுத வேண்டும். இது தான் இந்த பள்ளிகளுக்கு அரசின் விதிமுறை.
ஆனால், இப்படிப்பட்ட பள்ளிகள் இயங்க தேவையான கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. அதையெல்லாம் இந்த பள்ளிகள் நிறைவேற்றினவா? அதை நீங்கள் உங்கள் கண்முன்னே காணும் பள்ளிகளை பார்த்து அளந்து கொள்ள முடியும். ஒரு மெட்ரிக் பள்ளி தொடங்க என்னவெல்லாம் அடிப்படை விதிமுறைகள் என்பதையும், தமிழகத்தில் இப்படி எத்தனை பள்ளிகள் இருக்கின்றன என்பது பற்றி பல சச்சரவுகள்....அடுத்து தொடர்வோம்
.